இந்தியா

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பின்தொடரும் கொரோனா: கையறு நிலையில் டெல்லி ஆம்புலன்ஸ் சேவை

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பின்தொடரும் கொரோனா: கையறு நிலையில் டெல்லி ஆம்புலன்ஸ் சேவை

நிவேதா ஜெகராஜா

டெல்லியில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனாவால், கொரோனா நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் உடல்நலம் கேள்விக்குறியாகியுள்ளது. முறையான பாதுகாப்பின்றி பல நோயாளிகள் அழைத்துச்செல்லப்படும் அவலம் நிலவுவதால், டெல்லி முழுக்க ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில், நமக்கு எதாவது மருத்துவ அவசர உதவி தேவைப்பட்டால் முதலில் அழைப்பது ஆம்புலன்ஸ் சேவையைதான். ஆனால் அந்த ஆம்புலன்ஸை இயக்கக்கூடிய ஓட்டுநர்களுக்கு, ஏதாவதொரு பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் அனுபவிக்கும் அவதியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அவர்களின் வலி, அவர்களையே நம்பியிருக்கும் அவசர தேவை பயனாளர்களையும் அப்படியே பாதிக்கும் என்பது, கூடுதல் சோகம்.

டெல்லியும் இப்படித்தான் இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால், டெல்லி முழுக்க ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் ஏற்படும் விபத்து தொடங்கி, வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் திடீர் உடல்நலக் குறைவுவரையில், எந்தவொரு மருத்துவ அவசர உதவிக்கும், நம் கைகள் அணிச்சையாக ஆம்புலன்ஸ் சேவையை தான் நாடும் எனும்போது, கொரோனா மட்டும் விதிவிலக்கா என்ன? 

கொரோனாவின் முதல் அலையின் போது, அவசர உதவி தேவைப்பட்ட பல உயிர்களை துரிதமாக காப்பாற்றியது, இந்தியா முழுவதும் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள்தான். ஆனால் தற்போதைய இரண்டாவது அலை ஒட்டுமொத்த நாட்டை சூறையாடி வரும் நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் மிகக் கடுமையாக இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெல்லியிலுள்ள ஓட்டுநர்கள், தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து இயங்கக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனமான சத்வா ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம், சில மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை கொடுத்து வந்தனர். தற்போது இவர்களிடம் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களில் 90 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தங்களிடமுள்ள ஒன்பது ஆம்புலன்ஸ்களில் தற்பொழுது வெறும் இரண்டு மட்டும்தான் இயக்கப்படுவதாகவும் அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், 'சமீபத்தில் தங்களது 3 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோர பாதிக்கப்பட்டு உயிர் இழந்து விட்டதாகவும், உயிரிழந்த மூவரும் இரவு பகல் பார்க்காமல் தங்களது சொந்த குடும்பத்தை கூட கவனிக்காமல் முழுக்க முழுக்க மக்கள் சேவையில் இருந்தனர். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. புதிதாக இந்த பணிக்கு வர அனைவரும் அஞ்சுகிறார்கள்' எனவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஒருவேளை புதிய ஓட்டுநர்கள் கிடைத்தாலும்கூட, ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக ஆம்புலன்ஸ்களைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலைமை தான் டெல்லியில் நீடிக்கிறது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் மற்றொரு நிறுவனத்தை சேர்ந்தவர் நம்மிடம் பேசும்போது, தங்களிடம் 22 ஆம்புலன்ஸ்கள் இருப்பதாகவும் அதில் ஒன்றில் கூட ஆக்சிஜன்கள் இல்லாததால் ஆம்புலன்சை தொடர்ந்து இயக்க முடியாத நிலைமை தான் இருப்பதாகவும் தழுதழுத்த குரலில் சொன்னார். தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த பெரும்பாலான ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், அவர்களில் சிலர் இறந்து போயிருக்கிறார்கள் என்றும் இவர்கள் வெளிப்படையாக சொல்கின்றனர்.

இக்காரணங்களால், எங்களால் புதிய ஓட்டுநர்களை கண்டறிய முடியவில்லை என்றும், ஓட்டுநர்களுக்குள் ஏற்படும் பயத்தை தங்களால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், அவர்கள் சொல்கின்றனர். "எங்களிடம் தற்போது பணியாற்றக்கூடிய ஆம்புலன்ஸ் டிரைவர்களே, வண்டி ஓட்டுவதற்கு பதிலாக, மணிக்கணக்கில் காலியான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏந்திக்கொண்டு, அவற்றை நிரப்புவதற்காக வரிசையில் நிற்கின்றனர்” என்று வேதனையோடு பதிவுசெய்கின்றனர்.

"ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகிறது. எதிர்முனையில் இருப்பவர்கள், எப்படியாவது ஆம்புலன்ஸ் அனுப்புங்கள் என எங்களிடம் கெஞ்சும் பொழுது எங்களது உதவ முடியாத நிலைமை மேலும் வேதனையை தருகிறது. பதில் எதுவும் கூறாமல் அழைப்புகளை துடிப்பதை தவிர வேறு எந்த ஒரு வழியும் எங்களிடம் இல்லை” என மனமுடைந்து கூறுகின்றனர் அவர்கள்.

இதில் வேதனை என்னவென்றால் கொரோனா காரணமாக வேலை இழந்தவர்கள், கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆபத்து என்று தெரிந்தும் இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு வர முன் வருவதாகவும், ஆனாலும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு என்று சில பயிற்சிகளும் அனுபவமும் தேவைப்படுகிறது என்பதால், அவை இல்லாமல் ஆம்புலன்சை இயக்குவது என்பது சற்று சிரமமான காரியம் என்றும் சொல்லி, அவர்களை பணியமர்த்தாமல் இருப்பதாக சொல்கிறார்கள். இருப்பினும் சில நேரத்தில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கிடைக்கக்கூடிய ஓட்டுநர்களை வைத்து அவ்வப்போது தங்களது ஆம்புலன்ஸ்கள் இயக்குவதாகவும் கூறுகின்றனர்.

டெல்லியை பொறுத்தவரை, தற்போது பணியில் இருக்கக்கூடிய ஆம்புலன்ஸ் டிரைவர்களும் கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர். ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் வேலைபார்க்கும் இவர்கள் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமலும் இருப்பதால் அவர்களை தொடர்ந்து பணி செய்த வைப்பதிலும் சிக்கல்கள் இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் நிலைமையும் இதுதான் என ஓட்டுநர் சங்கங்களும், செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர். ஏற்கெனவே கடுமையான மருத்துவ குறைபாடுகளால் சிக்கித் திணறும் டெல்லி மக்களுக்கு, ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்சினைகள் மேலும் பின்னடைவையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.

மத்திய மாநில அரசுகள், இவ்விவகாரகங்களில் தலையிட்டு, உடனடியாக சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவே இப்போதைக்கு அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

நிரஞ்சன் குமார்