இந்தியா

"சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க அம்பேத்கர் விரும்பினார்"- தலைமை நீதிபதி பாப்டே!

jagadeesh

இந்தியாவில் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க பாபாசாகேப் அம்பேத்கர் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தயார் செய்திருந்தார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வகுப்பறை கட்டடங்கள் தொடக்க விழாவில் இந்திய தலைமை நீதிபதி ஷரத் பாப்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய பாப்டே "இந்தியாவில் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க, பாபாசாகேப் அம்பேத்கர் திட்டம் ஒன்றினை கொண்டிருந்தார். பின், அவரின் இந்த திட்டம் நாளடைவில் நீர்த்துப் போனது. நான், மராத்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என யோசித்தேன். எந்த மொழியில் பேச வேண்டும் என்பது குறித்தான குழப்பம், நீண்ட நாள்களாக நம் நாட்டில் நிலவி வருகிறது. நீதிமன்றங்களின் அலுவல் மொழி தொடர்பான பிரச்னை அடிக்கடி எழுவதை நான் கவனித்து வருகிறேன்"

மேலும் பேசிய அவர் "அதிகாரபூர்வ மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிலர், தமிழ், தெலுங்கு என நீதிமன்ற அலுவல் மொழியாக அவரவர் தாய்மொழியை விரும்புகிறார்கள். இந்த சர்ச்சைக்குரிய விசயத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த சிக்கல்கள் ஏற்படாதவாறு இருக்கவே, அம்பேத்கர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டத்தை முன் மொழிய இருந்தார்"

" ஆனால், இந்த முன்மொழிவு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அம்பேத்கரின் சமஸ்கிருத முன்மொழிவில், இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டதோடு, அவரின் கையொப்பமும் இருந்தது. வட இந்தியர்கள் தமிழ் மொழியையும், தென்னிந்தியர்கள் இந்தியையும் ஏற்க மாட்டார்கள் என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது. இந்த சூழலில், சமஸ்கிருதத்தை இருவருமே ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால் தான் இந்த முன்மொழிவு வெற்றிப் பெறாமல் இருந்திருக்கலாம்" என தெரிவித்துள்ளார் பாப்டே.