ஆனந்த் அம்பானி,ராதிகா மெர்ச்சண்ட் கூகுள்
இந்தியா

ரூ.2,675 கோடி செலவில் அம்பானி வீட்டு திருமணம்.. உலகையே வியக்க வைத்த சில திருமணங்கள் - ஓர் பார்வை

உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் அம்பானி வீட்டு கல்யாணம் ஒன்று, மிகவும் ஆடம்பரமானதாகவும் அதிக செலவுமிக்கதுமாக மாறியிருக்கிறது.

PT WEB

உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் அம்பானி வீட்டு கல்யாணம் ஒன்று, மிகவும் ஆடம்பரமானதாகவும் அதிக செலவுமிக்கதுமாக மாறியிருக்கிறது.

முகேஷ் அம்பானி, ஆசியாவின் பணக்கார தொழிலதிபர்... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர்... இவரின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானியின் திருமணம்தான் இணையம் முழுக்க இப்போது பேசப்படுகிறது. ஆனந்த் அம்பானியும் - என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டும் மண வாழ்க்கையில் இணைகிறார்கள். குஜராத்தின் ஜாம் நகரில் கடந்த மார்ச் மாதம் இவர்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிரமாண்டமாக
தொடங்கின.


விலங்குகள் மீட்பு மையத்திற்காக 3ஆயிரம் ஏக்கரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 'வந்தாரா' காட்டில் மூன்று நாட்கள் ஆடம்பரமாக விழா நடைபெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா மட்டுமன்றி, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருகைப் புரிந்தனர்.
மூன்று நாள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் 1,250 கோடி ரூபாய்
செலவாகியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே இது போன்ற ஒரு திருமணம் நடந்தது இல்லை என்று அனைவரும் வியக்கும் வகையில் முகேஷ் அம்பானி அதிக செலவு செய்துள்ளார்.
திருமணத்திற்கான மொத்த பட்ஜெட் சுமார் 2,675 கோடி ரூபாய் என்கிறது ஆய்வுத் தகவல்கள். இதற்குமுன் உலகில் நடைபெற்ற அதிகம் செலவுமிக்க திருமணங்களை சற்று நினைவுகூறலாம்.

வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா திருமணம், கின்னஸ் உலக சாதனைகளின்படி, 55 மில்லியன் டாலர் முதல் 60 மில்லியன் டாலர் வரையில்
செலவானது. இன்றைய மதிப்பில் 752 கோடி ரூபாயாகும். இந்திய எஃகு அதிபர் லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் - பிரிட்டன் தொழிலதிபர் அமித் பாட்டியாவின் திருமணம் ஆடம்பரமான
முறையில் ஆறு நாட்கள் நீடித்தன.

வனிஷா மிட்டல் - பிரிட்டன் தொழிலதிபர் அமித் பாட்டியாவின் திருமணம்

சுரங்கத் தொழிலதிபர் கலி ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்!

2016 ஆண்டு சுரங்கத் தொழிலதிபர் கலி ஜனார்த்தன ரெட்டியின் ஒரே மகள் பிராமணி ரெட்டிக்கும் ராஜீவ் ரெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நிகழ்ச்சிக்கு 74 மில்லியன் டாலர் செலவானது. இன்றைய மதிப்பில் 802 கோடி ரூபாயாகும். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து மத்திய அரசு விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற
இந்த ஆடம்பர திருமணம் விமர்சனத்திற்கு உள்ளானது.

சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய் மகள்கள் திருமணம்!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சஹாராவின் நிறுவனர் சுப்ரதா ராய், 2004இல் தனது இரண்டு மகள்களான சீமான்டோ மற்றும் சுஷாந்தோ ராய்க்கு ஆடம்பரமான திருமணத்தை நடத்தினார். சாந்தினி டூர் மற்றும்
சீமான்டோ ராய், ரிச்சா அஹூஜா மற்றும் சுஷாந்தோ ராய் திருமணத்திற்கு அப்போது 75 மில்லியன் டாலர் செலவானது. இன்றைய மதிப்பில் ஆயிரத்து 36 கோடி ரூபாயாகும். ஆறு நாள் விழாக்களில் மிகப் பெரிய பிரபலங்கள் உள்பட 11 ஆயிரம்
விருந்தினர்கள் பங்கேற்றனர்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம்!

கடந்த 2018இல் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமலுக்கும் நடைபெற்ற திருமணச் செலவு 100 மில்லியன்
டாலராகும். இன்றைய மதிப்பில் சுமார் 835 கோடி ரூபாயாகும்.

ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் திருமணம்

எமிரேட்ஸில் 1979இல் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜூமா அல் மக்தூம்
இடையேயான திருமணத்தின் செலவு 45 மில்லியன் டாலர். இன்றைய மதிப்பில் ஆயிரத்து 145 கோடி ரூபாய். ஒரு வார
கொண்டாட்டம் எமிரேட்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. மணமகன் 20 ஒட்டகங்களை
நகைகளால் அலங்கரித்து மணமகளுக்கு திருமணப் பரிசுகளை
வழங்கினார்.நூற்றாண்டின் பிரமாண்ட திருமண

நூற்றாண்டின் பிரமாண்ட திருமணம்

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முன், உலகின் அதிக செலவுமிக்க திருமணத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அது இளவரசி டயானா ஸ்பென்சர் மற்றும் இளவரசர் சார்லஸ் திருமணம்தான். 1981இல் நடந்த அரச திருமணமானது, நூற்றாண்டின் பிரமாண்ட திருமணமாக கருதப்பட்டது. அப்போது 48 மில்லியன் டாலராக இருந்த செலவு, இன்றைய மதிப்பில் ஆயிரத்து 362 கோடி ரூபாயாக உள்ளது. பத்தாயிரம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட உடையில் இளவரசி டயானா
மின்னினார்.