இந்தியா

அம்பானி வீடு அருகே கார் வெடிகுண்டு விவகாரம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

webteam

தொழிலதிபர் அம்பானியின் வீட்டின் முன்பு காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் தனது வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அகற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தொழிலதிபர் அம்பானி வீட்டின் அருகே கடந்த 25-ஆம் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நின்றதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் காரில் ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக்கிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் தனது காரை திருடி, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.



அதனைத்தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி அவர் மர்மமான முறையில் தானே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அப்போது பேசிய ஹிரேன் மன்சுக்கின் மனைவி, உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாசேவ், தனது கணவரிடம் இருந்து வாகனத்தை கடனாக வாங்கியதாகவும், ஆகையால் கணவரின் இறப்பில் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் வாசேவிடம் தீவிர விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், அதிகாரிகள் வாசேவுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.

இந்த ஆய்வில் வாசேவ் தனக்கு சொந்தமான வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ பதிவுகளை அகற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. ஹிரேன் மன்சுக்கின் மரணத்திற்கு எதிரான தனது ஆதாரங்களை அழிப்பதற்காக வாசேவ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் யூகிக்கின்றனர். இது தொடர்பாக சிஐயூ உதவி காவல் அதிகாரி ரியாஸ் காசிடமும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.