model image freepik
இந்தியா

கேரளா: சிறுமிக்கு நடந்த கொடூரம்.. 100 நாட்களில் விசாரித்து மரண தண்டனை அளித்த நீதிமன்றம்!

கேரளா மாநிலம் ஆலுவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Prakash J

கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது 5 வயதுப் பெண் குழந்தை ஒன்று, கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி காணாமால் போனது. இதுதொடர்பாக அவர், காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். சிறுமி காணால் போனதற்கு அடுத்த நாள் (ஜூலை 28) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் அச்சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அதைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவரைக் கைதுசெய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்முடிவில் சிறுமியை அவர், வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4ஆம் தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்ததுடன், தண்டனை வருகிற 14ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று அவருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் தினமான இன்று, அந்தக் குழந்தையைக் கொன்ற அசாஃபத்துக்கு போக்சோ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையைப் பலரும் வரவேற்றுள்ளனர். 100 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: மஹுவா மொய்த்ராவுக்கு புதிய பொறுப்பு.. ஆதரவுக்கரம் நீட்டிய திரிணாமுல்! மம்தாவின் திட்டம் என்ன?