வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநில மக்களுக்கு பிரார்த்தனைகளுடன் கூடிய உதவியும் தேவை என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் மிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 48 லட்சம் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்தித்துள்ளனர். 4,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வெள்ளத்தால் இதுவரை 76 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அசாமில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா உள்ளிட்ட 13 நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. சுமார் 450 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் 90 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் 5 காண்டா மிருகங்கள் உட்பட 76 காட்டு விலங்குகள் உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 170விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் "அசாம் மக்களுக்கு பிரார்த்தனைகளுடன் கூடிய உதவியும் கவனமும் தேவைப்படுகிறது. அசாம் மக்கள் இந்த வெள்ள பாதிப்பிலிருந்து மீள்வதற்கான இயன்ற உதவிகளை செய்யுங்கள். இந்த பேரிடரால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை உயரக் கூடாது என்பதே என்னுடைய நம்பிக்கை" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.