இந்தியா

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு விசாரணையை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்: உச்சநீதிமன்றம்

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு விசாரணையை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்: உச்சநீதிமன்றம்

webteam

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி 20 வயது நிரம்பிய பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பெண்ணின் உடலை அவரது வீட்டின் அருகே வைத்து எரித்தது கூடுதல் சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக போராட்டங்கள் வெடித்த நிலையில், தற்போது வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பான விசாரணையை இன்று விசாரித்த நீதிபதி எஸ்ஏ போப்டே தலைமையிலான அமர்வு, சிபிஐ வழக்கு விசாரணையை  அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்க என உத்தரவிட்டார். மேலும் வழ்க்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது தொடர்பான முடிவானது, சிபிஐ வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் விவாதிக்கப்படும் எனக் கூறினார்.