மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைத்திருப்பது அடிப்படை உரிமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை அம்மாநில அரசு அப்புறப்படுத்தி வருகிறது.
இதனிடையே, அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதோன் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இர்ஃபான் மேல்முறையீடு செய்தார். அதில், "மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைப்பது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமை" என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி விவேக் குமார் பிர்லா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மசூதிகளில் ஒலிப்பெருக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமை கிடையாது. தவறான புரிதலுடன் இந்த மனு தாக்கல் செய்யபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறினார்.
முன்னதாக, மசூதிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளில் இருந்து வரும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைப்பது அத்தியாவசிய நடைமுறை கிடையாது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.