உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரைச் சேர்ந்த 19 வயது பெண், அவரது காதலனுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். ஓராண்டாகச் சேர்ந்து வாழ்ந்தநிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்யும்படி காதலனிடம் கூறியிருக்கிறார். காதலன் மறுப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனை கைது செய்தனர். அவர் ஜாமீன்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அத்துடன், லிவ்-இன் உறவு வாழ்க்கை முறை குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். "ஒரு நபருக்கு திருமண பந்தம் வழங்கும் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை லிவ்-இன் உறவில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு சீசனிலும் துணைகளை (பார்ட்னர்) மாற்றுவது என்ற மோசமான கருத்தை, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக கருத முடியாது.
மேலும் இதுபோன்ற விளைவுகள் அத்தகைய உறவுகளிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படுகின்றன. பிரிவுக்குப் பிறகு பெண் துணைக்குச் சமூகத்தை எதிர்கொள்வது கடினம். நடுத்தர வர்க்க சமூகம் அப்படிப் பிரிக்கப்பட்ட பெண்ணைச் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. உறவில் இருந்து பிறக்கும் பெண் குழந்தையின் விஷயத்தில், விரிவாக விவரிக்க முடியாத பிற மோசமான விளைவுகள் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தினந்தோறும் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் நடுத்தர வர்க்க ஒழுக்கநெறியை புறக்கணிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பல நாடுகளில் திருமண பந்தத்தைப் பாதுகாப்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. இதுபோன்ற ஒரு கலாசாரம் உருவாவது, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்னையாக மாறும். அதேபோல், இந்த நாட்டில் திருமண பந்தம் வழக்கற்றுப்போன பிறகுதான் லிவ்-இன் உறவு சாதாரணமாக கருதப்படும். திருமண உறவில் துணைக்கு துரோகம் செய்வதும், திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதும் முற்போக்கு சமுதாயத்தின் அறிகுறிகளாகக் காட்டப்படுகின்றன. இத்தகைய தத்துவம் அதிகரித்து வருவதால், இதன் நீண்டகால விளைவுகளைப் பற்றி அறியாமல் இளைஞர்கள் இதுபோன்ற உறவினால் ஈர்க்கப்படுகிறார்கள்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.
லிவிங் டுகெதர், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் முடிக்காமல் இணைந்து வாழ்வதை குறிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற உறவுகள் சகஜமாக இருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அந்த கலாசாரம் மேலோங்கியுள்ளது.