இந்தியா

தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணை நிற்போம் - எதிர்க்கட்சிகள் உறுதி

தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணை நிற்போம் - எதிர்க்கட்சிகள் உறுதி

webteam

தாக்குதல் தொடர்பாக எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதியாக நிற்போம் என எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் நடக்கும் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இதில் 21 கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில், தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக நிற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ராணுவ நடவடிக்கையை ஆளும் தரப்பு அரசியலாக்கக் கூடாது என எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அதேநேரம் இரண்டு இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. அத்துடன் ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என இந்திய விமானப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.