வயநாடு pt web
இந்தியா

கோரப்பசியை தீர்த்துக்கொண்ட நிலச்சரிவு.. சொந்த செலவில் உணவளித்து வரும் அன்னதான பிரபுக்கள்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, கிராமங்களை விழுங்கி தனது கோரப்பசியை தீர்த்துக்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை வாடாமல் காப்பாற்ற அரும்பணியாற்றி வருகிறார்கள் அம்மாநில சமையலர்கள்.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, கிராமங்களை விழுங்கி தனது கோரப்பசியை தீர்த்துக்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை வாடாமல் காப்பாற்ற அரும்பணியாற்றி வருகிறார்கள் அம்மாநில சமையலர்கள்.

வயநாடு

ஒரே நாள் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவு, கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளை உருக்குலைத்திருக்கிறது. இப்பேரிடரில் மீட்கப்பட்ட மக்கள், நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மேப்பாடி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 3 வேளையும் உணவு சமைத்து பரிமாறப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள சுமார் 600 பேருக்கும் 3 வேளையும் உணவளித்து வருகிறது ALL KERALA CATERS ASSOCIATION என்னும் கேரள சமையற் கலைஞர்களின் கூட்டமைப்பு. திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் உணவு சமைத்து தரும் அவர்கள், தற்போது முகாமில் உள்ள மக்களுக்கு இலவசமாக உணவு தயார் செய்து வழங்கும் உன்னத பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 30ஆம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தவர்கள், பேரிடர் குறித்து அறிந்ததும் போராட்டத்தை கைவிட்டு விட்டு வயநாட்டிற்கு வந்து, மக்களின் பசியாற்றி வருகிறார்கள். தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த துயரமாக இந்த பேரிடரை கருதுவதாக கூறும் அவர்கள், தங்கள் வீடுகளில் தயார் செய்வதை போலவே உணவை தயார் செய்வதாகவும், தங்களால் இயன்றவரை இதனை செய்வோம் என்கிறார்கள்.

"மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடம் பறந்துபோம்" என, பசிப்பிணியால் அற்றுப்போவனவற்றை பட்டியலிடுகிறது பழந்தமிழ் பாடல். இவையனைத்தையும் ஏற்கனவே இழந்து நிற்கும் மக்களுக்கு சொந்த செலவில் பசிப்பிணி அண்டாமல் தடுக்கும் சமையலர்களின் செயலை வார்த்தைகளால் போற்றுவது இயலாத காரியமே.