இந்தியா

திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் இனி இலவச லட்டு

திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் இனி இலவச லட்டு

Rasus

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச பிரசாதமாக ஒரு லட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதன்முறையாக 1715-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்துதான் லட்டு பிரசாத நெய்வேத்தியம் செய்யும் முறை கொண்டுவரப்பட்‌து. தொடக்கக்காலத்தில் பூந்தியே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 1940-ஆம் ஆண்டிலிருந்துதான் லட்டை பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கியது.

திருப்பதி கோயில் பிரசித்திப்பெற, அங்கு கொடுக்கப்படும் லட்டு பிரசாதமும் பிரபலமடைந்தது. சிலர் சட்டவிரோதமாக திருப்பதி லட்டு என்ற பெயரில் விற்கத் தொடங்கினர். அதனால், 2008-ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டது. இதுநாள்வரை மலைப்பாதை வழியாக கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்குமே ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும், 70 ரூபாய்க்கு 4லட்டுகள் வழங்கப்பட்டு வந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் என எப்படி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றாலும் ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.

கூடுதலாக தேவைப்படுவோர் கோயிலுக்கு வெளியேயுள்ள கவுண்டர்களில் 50 ரூபாய் கொடுத்து ஒரு லட்டு வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.