தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அஜித் பவார், தன் ஆதரவாளர்களுடன் திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார். பின்னர், அங்கு துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், தன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார். இது, மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.
இதையடுத்து, ’அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கட்சித் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார். அதில் சிலரை கட்சியிலிருந்து நீக்கவும் செய்தார். மேலும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடமும் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அஜித் பவார் அணியினர் திடீரென, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, கடந்த 16ஆம் தேதி சந்தித்தனர். இதனால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரபுல் படேல், “சரத்பவாரின் ஆசி வாங்க அவரைச் சந்தித்தோம். அவரின் ஆசியை வாங்க இங்கு வந்தோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். நாகலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அஜித் பவார் பக்கம் சென்றிருப்பது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.