டெல்லி தேர்தலில், வாக்குப்பதிவின்போது காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைய முயன்றார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 19.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் தெரிந்து விடும்.
இந்நிலையில் வாக்குப்பதிவின்போது காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைய முயன்றார். மஜ்னு கா திலா என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காவலர்களின் முன்னிலையில் அல்கா லம்பா அவ்வாறு நடந்து கொண்டார்.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தரப்பிலிருந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான அவர், இம்முறை அக்கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் களமிறங்கினார். இந்த நிலையில் 'கட்சித் தாவி போட்டியிடும் அல்கா லம்பா' என்று ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ஒருவர் முழக்கமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சித் தொண்டரை அறைய கை ஓங்கினார். அதற்குள் அந்த தொண்டர் விலகிவிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி தொண்டர் தன்னைப் பற்றி தரக் குறைவாக பேசியதாக அல்கா லம்பா சாடியுள்ளார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டரை அங்கிருந்த காவலர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.