வித்தியாசமான திருடன் மனோரமா
இந்தியா

கேரளா | இரண்டு மாதத்தில் 200 திருட்டு சம்பவங்கள்.. மேலாடையின்றி தனி பாணியில் திருடி வந்தவர் கைது!

Jayashree A

கேரளாவில் மாவேலிக்கரை ஆலப்புழா சிறையில் இருந்து வெளிவந்த பாகிசுபர் 2 மாதத்தில் 200 திருட்டுகளை செய்து மீண்டும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆலப்புழாவை அடுத்துள்ள அம்பலாப்புழா, வலஞ்சாவிஹி வீதியில் உள்ள கடைகளில் கடந்த மாதங்களாக தொடர்ந்து திருட்டுகள் நடந்து வந்துள்ளது. போலிசாரால் திருடனை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அப்பகுதி மக்கள், இலவு காத்த கிளி போல, திருடனுக்கு பயந்து வீட்டையும் அலுவலகத்தையும் காவல்காத்து வந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலப்புழாவை அடுத்துள்ள செட்டிகுளங்கரை ஏரேழாவுக்கு தெற்கே ஆல்தரமுக்கிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அடுத்து அக்குடும்பத்தினர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த திருட்டு, கொள்ளை முயற்சி போன்ற சம்பவத்தால், போலிசாரின் பார்வை சமீபத்தில் விடுதலையான பாகிசுபர் என்பவரின் மீது விழுந்துள்ளது. இருப்பினும் அவரை பிடிக்க போதுமானகாரணம் இல்லையாததால் அவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில், அதேபகுதில், இருதினங்களுக்கு முன், ஒரு வீட்டில் இருந்த ஒரு ஸ்கூட்டரைத் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு திருடன் திருடன் என்று கத்தியுள்ளார். இதனால் திருட முயன்றவர் ஸ்கூட்டரை அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருக்கும் ரயில்பாதை வழியாக ரயில்நிலயத்திற்கு தப்பி ஓடி இருக்கிறார். இவர் ஓடி வந்ததை பார்த்த ரயில்வே கேட்கீப்பர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ரயில்வே ஊழியரின் தகவலை அடுத்து ரயில்நிலயத்திற்கு வந்த போலிசார் அங்கு சோதனை நடத்தினர். அப்பொழுது 3வது நடைமேடையில் ஒரு பயணியாக நின்றுக் கொண்டிருந்த பாகிசுபரை கைது செய்தனர் காவல்துறையினர்.

யார் இந்த திருடன் பாகிஜுபர்

ஆலப்புழாவை அடுத்துள்ள சூரநாடு குழவிலை வட்டகெட்டிலை சேர்ந்தவர் பாக்கி ஜுபைர். இவருக்கு சொந்தபந்தங்கள் எதுவும் இல்லை. சிறுவயதிலிருந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதில் இவருக்கென்று சில கொள்கைகளும் உண்டு. இவர் இரவு நேரங்களில் திருட கிளம்பி விட்டால், மேலாடை எதுவும் இன்றி உள்ளாடை மட்டுமே அணிந்துக்கொண்டு செல்வாராம்.

அதே போல், ஒரு கடையில் திருட்டை நடத்தினால், அடுத்தடுத்த நாட்களில் அப்பகுதியில் இருக்கும் அடுத்தடுத்த கடைகளில் திருட்டை நடத்துவது இவரின் வழக்கமாம். அதே போல் திருடும் சமயம் மாட்டிக்கொண்டால், தன்னை பிடித்தவருக்கு கத்தியை காட்டி மிரட்டுவது, அடிப்பது, போன்ற எந்த தொந்தரவு ஏதும் கொடுக்காமல், லாவகமாக தப்பித்துவிடுவாராம். அதேபோல் தன்னை பிடித்துவிட்டால் முகத்தை மறைத்துக்கொள்ளவும் மாட்டாராம், சிறைக்கு சென்று திரும்பினால் மீண்டும், திருடத்தான் ஆரம்பிப்பாராம்.

100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கினால் சிறை சென்றவர் இரண்டு மாதங்களுக்கு முன் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். இந்த இரண்டு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட திருட்டுகளை செய்தவர், ஒரு ஸ்கூட்டரை திருடும் போது போலிசாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Courtesy - Manorama News