இந்தியா

‘உணர்வுகளோடு விளையாடாதீர்கள்’ - அக்‌ஷய் குமாருக்கு ராணுவ வீரர்கள் எச்சரிக்கை

‘உணர்வுகளோடு விளையாடாதீர்கள்’ - அக்‌ஷய் குமாருக்கு ராணுவ வீரர்கள் எச்சரிக்கை

rajakannan

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவிக்கு ராணுவ வீரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ரஸ்டம் படத்தில் அக்‌ஷய் குமார் அணிந்த ராணுவ சீருடை ஏலம் விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், கடந்த சில வருடங்களாக நல்ல கதையம்சம் கொண்ட, சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘ஏர்லிஃப்ட்’, ‘ரஸ்டம்’, ‘ஜாலி LLB 2’, ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’, ‘பேட்மேன்’ போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இதில், நீரஜ் பாண்டே தயாரிப்பில் அக்ஷய் குமார், இலியானா நடித்த பாலிவுட் படமான 'ரஸ்டம்' 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டது. நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ரஸ்டம்' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவர் வென்றார். இதில் அக்‌ஷய் குமார் கப்பல் படை அதிகாரியாக நடித்திருந்தார். 

இதனிடையே, ரஸ்டம் படத்தில் அக்‌ஷய் குமார் அணிந்திருந்த கப்பல் படை அதிகாரியுடைய சீருடை ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கில் கண்ணா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மே 26ம் தேதி இந்த ஏலம் முடிவடைகிறது. அந்த சீருடைக்கு ஒருவர் ரூ2 லட்சத்து 35 ஆயிரம் ஏலம் கோரியிருந்தார். இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை சமூக நல பணிகளுக்கு செலவிட உள்ளதாக அக்‌ஷய் குமார் அறிவித்து இருந்தார். 

இந்நிலையில், ராணுவ சீருடை ஏலம் விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவிக்கு ராணுவ வீரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 11 ராணுவ அதிகாரிகள், ஒரு விமானப்படை அதிகாரி, 7 ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் இந்த நோட்டிஸை அனுப்பியுள்ளனர். அக்‌ஷய் குமாரும், அவரது மனைவியும் ராணுவ வீரர்களின் உணர்வுகளோடு விளையாடுவதாக அதில் தெரிவித்துள்ளனர். மேலும் ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்துள்ளனர்.