திட்டமிட்டு விகாஸ் துபே என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்
கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார். நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே, உத்தரப்பிரதேச சிறப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது மழை பெய்ததால், விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தப்ப முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விகாஸ் துபே திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் ரகசியங்களை மறைக்க விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், விகாஸ் வந்த கார் தானாக கவிழவில்லை என்றும் கவிழ்க்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.