இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் 14 போலி சாமியார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத்தை சேர்ந்த சாமியார் அசராம் பாபு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மும்பையில் ஆசிரமம் நடத்தி வரும் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் மீது வழக்குகள் உள்ளன. சாமியார்கள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில் போலி சாமியார்கள் பட்டியலை இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் வெளியிட்டுள்ளது.
அதில், குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா, ஓம் பாபா, சச்சிதானந்த கிரி, நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், ராம்பால் உள்பட 14 பேர் போலி சாமியர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். அலகாபாத்தில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு மடங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
’இந்து பாரம்பரியத்துக்கு உட்படாத மற்றும் கேள்விக்குரிய செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற சாமியார்களிடம் கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பிற சாதுக்கள் மற்றும் முனிவர்களுக்கு அவமரியாதை ஏற்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.