மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அக்கட்சியிலிருந்து வெளியேறினார் அஜித் பவார். தொடர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் அவர் இணைந்தார். இதையொட்டி, அஜித் பவார் தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகிய அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் முன்னிலையில் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
சரத் பவார் தலைமையிலான கட்சியில் மொத்தம் 53 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், தற்போது அஜித் பவாருக்கு அக்கட்சியைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சில ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பேவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது யூகம் மட்டுமே எனவும், இது உண்மை இல்லை எனவும் சரத்பவார் விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக சரத்பவார் கடந்த மே 2ஆம் தேதி அறிவித்திருந்தார். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு கட்சியின் தலைவர்கள் அனைவரும் ’சரத் பவார் பதவியிலே தொடர வேண்டும். அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அவருக்கே உள்ளது’ என வலியுறுத்தினர். இதையடுத்து, அஜித் பவாருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வெளியேற மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது.
பல நாட்கள் கட்சித் தலைவர்களைக் காக்க வைத்த பிறகு சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக தொடர ஒப்புக்கொண்டார். அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்கும் எண்ணமே கிடையாது என்றும் அவர் கூறினார். “அடுத்த வருட மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போதைய எதிர்க்கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடியில் தொடரும்” எனவும் கூறி அஜித் பவாருக்கு ’செக்’ வைத்தார் சரத் பவார்.
இதைத் தொடர்ந்து சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவிற்கு கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். மாநில சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே அவருக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதன்மூலம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் சுப்ரியாவின் ஆதரவாளர்களாக அவரது முகாமில் இணைந்துவிடுவார்கள் என்பது கட்சித் தலைவர்களின் எண்ணமுமாக இருந்தது. அதேநேரத்தில் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவாரின் ஆதரவு முகாம் பலவீனமடையும் என அவர்கள் கணித்தனர்.
ஆனால் முன்னதாக மகாராஷ்டிரா மாநில விவகாரங்களை அஜித் பவாரே கவனித்துவந்ததால், கட்சியில் சரத் பவாருக்கு அடுத்த தலைவராகவே அவர் பார்க்கப்பட்டார். ஆகவே அவர் கட்சியைவிட்டு விலகி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக கூட்டணியில் இணைவது வலுவான தாக்கத்தை உண்டாக்கும் எனக் கருதப்பட்டது.
இப்படியான ஒருவருக்கு சுப்ரியா மூலம் செக் வைத்ததன் மூலம், ‘இனி அஜித் பவாருக்கு அதிக ஆதரவு இருக்காது. கட்சியைவிட்டு வெளியேறினாலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் பயணிக்க மாட்டார்கள். இனி அஜித் பவார் மூலம் கட்சியில் பிளவு இருக்காது’ என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதினர். ஆனால், அவர்களது நம்பிக்கை இன்று சுக்குநூறாய் உடைந்திருக்கிறது.