சரத் பவார், அஜித் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

தேர்தல் தோல்வி| அதிருப்தியில் அஜித் பவார்.. தாய் கட்சிக்கு திரும்ப தயாராகும் 18 எம்.எல்.ஏக்கள்!

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை என்சிபி அஜித் பவார் புறக்கணித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. எனினும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. ஜூன் 9ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை என்சிபி அஜித் பவார் புறக்கணித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாஜகவின் துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு சிவசேனா ஆட்சியில் உள்ளது. இதே ஆட்சியில் தேசியவாத காங்கிரஸின் பிரிவு அஜித் பவாரும் அங்கம் வகிக்கிறது. அதாவது சிவசேனா உடைந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்து சரத் பவார் தலைமையில் ஓர் அணியும், அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. இதில் சரத் பவார், உத்தவ் தாக்கரே அணிகள் காங்கிரஸ் தலைமையிலான I-N-D-I-A கூட்டணியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய அணிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன.

இதையும் படிக்க: ”சந்தேகமே இல்லாமல் 300+ இடங்களில் பாஜக வெல்லும்”- ஆருடம் சொன்ன பிரசாந்த் கிஷோரை தேடும் நெட்டிசன்கள்!

இந்தக் கூட்டணிகளே மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இதில் பாஜக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. அதிலும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் சரத் பவார் தரப்பிற்கு அதிக வெற்றிகள் கிடைத்த நிலையில் அஜித் பவார் தரப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித் பவார் அணி, 1 இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து களமிறங்கிய அஜித் பவாரின் மனைவி படுதோல்வியைச் சந்தித்தார். அதேநேரத்தில், சரத்பவார் தரப்பில் 8 எம்.பிக்கள் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள அவர், நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தொகுதி உடன்பாட்டில்கூட அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், அவருடைய ஆதரவு பெற்ற எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, அவர்கள் அனைவரும் மீண்டும் தாய் வீட்டுக்கே செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சரத் பவார் அணியுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவாரின் கட்சிதான் எனவும் அஜித் பவாரின் பிரிவு காணாமல் போய்விடும் என சரத் பவார் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் பவார், சரத் பவார்

இதுகுறித்து சரத் ​​பவாரின் பேரனும் கர்ஜத்-ஜாம்கேட் எம்எல்ஏவுமான ரோஹித் பவார், “கிட்டத்தட்ட அஜித் பவார் முகாமில் இருக்கும் 18 முதல் 19 எம்எல்ஏக்கள் மீண்டும் எங்களது கட்சிக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

”அவர்களை ஏற்றுக் கொள்வது குறித்து சரத்பவார் தான் முடிவு செய்ய வேண்டும் ”என சரத்பவாரின் ஆதரவாளரான ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அஜித் பவாருக்கு தேர்தல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து அவர் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார். அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிக்க: நீட் தேர்வில் மோசடியா? ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம்.. 718, 719 மதிப்பெண்கள் எப்படி? எழும் கேள்விகள்