இந்தியா

முதுகில் குத்திவிட்டார் அஜித் பவார்: சஞ்சய் ராவத் காட்டம்

முதுகில் குத்திவிட்டார் அஜித் பவார்: சஞ்சய் ராவத் காட்டம்

webteam

’மகாராஷ்டிர மக்களின் முதுகில் அஜித்பவார் குத்திவிட்டார் என்று சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தேவேந்திர பட்னாவிஸுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் அடுத்த திருப்பமாக, பாஜகவோடு, அஜித்பவார் கூட்டணி அமைத்திருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று அதிரடியாக அறிவித்துள்ளார் சரத் பவார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, ’’மகாராஷ்டிராவின் வானிலை சட்டென்று மாறிவிட்டது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு தொடர்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார். அமலாக்கத் துறையின் விசாரணையில் இருக்கும் அவர் பயந்துவிட்டார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் சரத் பவார் தொடர்பில்தான் இருக்கிறார். இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.