இந்தியா

ஏர்செல் 2ஜி உரிமம் முடக்கப்படும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏர்செல் 2ஜி உரிமம் முடக்கப்படும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

webteam

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் அனந்தகிருஷ்ணனும், ரால்ஃப் மார்ஷலும் நேரில் ஆஜராகத் தவறினால், ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமம் முடக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் மற்றும் நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ‌ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் விசாரணையில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் அனந்தகிருஷ்ணன் மற்றும் ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் நேரில் ஆஜராகாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உடனடியாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது அவர்கள் ஆஜராகத் தவறினால், ஏர்செல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2ஜி உரிமம் முடக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மலேசியாவின் இரண்டு முன்னணி நாளி‌தழ்களில் இதுதொடர்பாக விளம்பரம் செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாட்டின் இயற்கை வளத்தை தனிநபர்கள் தவறாகப் பயன்படுத்துவதையும், நீதிமன்ற நோட்டீசை மதிக்காததையு‌ம் சகித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமம் முடக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மற்ற தொலைபேசி நிறுவனங்களுக்கு அந்த அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வழிகளை ஆராயுமாறும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீது 9ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை அதன் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததில் சன் குழும நிறுவனங்களில் 742 கோடியே 58 லட்ச ரூபாயை முதலீடாக மொரிஷியஸ் நாட்டின் வழியே பெற்றதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளன.

இதில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மற்றும் அவர்களுக்குச் சொந்தமான சவுத் ஏசியா FM, சன் டைரக்ட் மற்றும் மேக்சிஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. மலேசியாவில் வசிக்கும் அனந்தகிருஷ்ணன் மற்றும் ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீ‌ஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பலமுறை ஆஜரான தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.