இந்திய விமானப்படை தாக்குதலால் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது.
இதையடுத்து நேற்று காலை நமது எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி தங்கள் வசம் பிடிபட்டதாக பாகிஸ்தான் கூறியது. இதனைத்தொடர்ந்து புல்வாமா தாகுதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்தும், அந்த அமைப்பின் முகாம்கள் பாகிஸ்தானில் செயல்படுத்துவது குறித்தும் ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும், பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாகவும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக இது வழிவகுக்கும் எனவும் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.