இந்தியா

சுவாசிக்க முடியாமல் திணறும் தலைநகரம்! தண்ணீரை பீய்ச்சு அடிக்கும் அவலம்

சுவாசிக்க முடியாமல் திணறும் தலைநகரம்! தண்ணீரை பீய்ச்சு அடிக்கும் அவலம்

webteam

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசின் அளவு 300 புள்ளிகளை கடந்தது இயல்பு வாழ்க்கை மோசமாகி உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் , காற்று மாசை கட்டுப்படுத்தும் விதம் டெல்லியில் பல பகுதிகளில் தண்ணீரை பீச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

டெல்லியின் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் மற்றும் குளிர்காலம் தொடக்கம் என்பதால் டெல்லியில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை பதிவான காற்று தர குறியீடு 398 ஆக உள்ளது. இது கடந்த வியாழன் அன்று 354 ஆகவும், புதன்கிழமை அன்று 271 , செவ்வாய் அன்று 302 , மற்றும் தீபாவளி தினமான திங்கட்கிழமை அன்று 312 ஆக பதிவானது.

ஆனந்த் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 454 ஆக தலைநகரில் மிகவும் மாசுபட்ட இடமாக உள்ளது. வசீர்பூர் (439), நரேலா (423), அசோக் விஹார் (428), விவேக் விஹார் (427) மற்றும் ஜஹாங்கிர்புரி (438) ஆகியவை "கடுமையான" காற்றின் தரத்தைப் பதிவு செய்த பகுதிகளாகும் .அண்டை நகரங்களான காசியாபாத் (381), நொய்டா (392), கிரேட்டர் நொய்டா (398), குருகிராம் (360) மற்றும் ஃபரிதாபாத் (391) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் "கடுமையான" நிலையில் உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை தொடர்ந்து தடையை மீறி எரித்து வருகின்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தகவலின்படி சமீபத்தில் பஞ்சாபில் ஏற்பட்ட பண்ணை தீ விபத்துகள் 2,067 ஆகவும், ஹரியானாவில் 124 விபத்துக்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 34 ஆகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் காற்று மாசு குளிர் காலங்களில் அதிகரித்து வரும் நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த உயரமான மரங்கள் மற்றும் கட்டடங்களில் தண்ணீரை பீய்ச்சு அடிக்கும் பணி மற்றும் சாலைகளில் தண்ணீரை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.  டெல்லியில் மோசமான காற்றை சுவாசிப்பதால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாலைகளில் நடை பயிற்சி , சைக்கிளிங் செல்பவர்கள் சுவாசிக்க சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். விரைவில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வீதம் மாநில அரசின் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-ராஜீவ்