செய்தியாளர் ராஜீவ்
காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்து மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “காற்று மாசுபாடு சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியுள்ளது. காற்றுத் தரக் குறியீடு சில மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மிதமான மற்றும் மோசமான நிலையை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் குளிர்காலத்தின் தொடக்கத்தைக் கருத்தில் கொண்டு இது இன்னும் மோசமடையக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடும் மாசுபாட்டு சுவாசம் என்பது இருதயம் மற்றும் பெருமூளை அமைப்புகளை பாதிக்கக்கூடும். காற்று மாசுபாட்டின் நீண்ட கால வெளிப்பாடு என்பது பெரும்பாலும் முன்கூட்டிய இறப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போன்றவர்கள் அதிக பாதிப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றனர். எனவே மாநில அரசுகள் அவற்றின் தயார் நிலையை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல் மற்றும் அந்தந்த மொழி ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களுக்கான கண்காணிப்பு அமைப்புகள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும். விழிப்புணர்வு மூலம் குப்பைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதை ஊக்கப்படுத்துதல், பண்டிகைகளின்போது பட்டாசுகள் வெடிப்பதை குறைத்தல், தனிநபர் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் பொது போக்குவரத்தை ஊக்குவித்தல், டீசல் அடிப்படையிலான ஜெனரேட்டர்களை நம்பியிருப்பதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகைபிடிப்பதை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதிக நெரிசலான பகுதிகளைத் தவிர்த்தல் மற்றும் வீட்டில் சமையல், சூடு மற்றும் விளக்குகளுக்கு சுத்தமான எரிபொருளை தேர்ந்தெடுப்பது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுவாசம் மற்றும் இருதய நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்கெனவே உள்ளவர்கள் மோசமான அறிகுறிகளை அல்லது மோசமான காற்றின் தரம் காரணமாக அசௌகரியத்தை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.