நடுவானில், ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டும் பத்திரமாக தரையிறக்கி, 370 பயணிகளின் உயிரை விமானி காப்பாற்றிய சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் கடந்த 11 ஆம் தேதி 370 பயணிகளுடன் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்றது. 15 மணி நேரப் பயணம் முடிந்து நியூயார்க் அருகே வந்தபோது மோசமான வானிலை நிலவியதால் விமானம் தரையிறங்க முடியவில்லை. விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்களிலும் சிக்கல். ஒரே ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டும் செயல்பட்டது. அதன்மூலம் நியூயார்க் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.
Read Also -> கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி
Read Also -> ரகசியமாக கசிந்த அஜித்தின் ‘விஸ்வாசம்’ சண்டைக்காட்சி
மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரையிறக்க உதவும் கருவிகளும் செயல்படாததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் எரிபொருளும் தீர்ந்தது. பின்னர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கினர். இதனால் 370 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அந்த விமானியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நடந்துவருகிறது’ என்றார்.