ஏர் இந்தியா x page
இந்தியா

தகுதியற்ற விமானியுடன் பறந்த விமானம்... ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி வரை அபராதம்!

தகுதியற்ற விமானியுடன் பறந்ததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன.

குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.ஏ) ரூ.99 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதையும் படிக்க: A1, A2 பால் பொருட்களா? உடனே அகற்றவும்.. உணவு தர நிர்ணய அமைப்பு உத்தரவு!

ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காகவும், தகுதியற்ற விமானி மூலம் விமானத்தை இயக்கியதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் டிஜிசிஏவின் கவனத்திற்கு வந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, டிஜிசிஏ விசாரணையை மேற்கொண்டு ஒழுங்குமுறை விதிகளில் குறைபாடுகள் மற்றும் பல மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.90 லட்சமும், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று, பனிமூட்டத்தில் விமானங்களுக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர இண்டிகோ நிறுவன விமானப் பயணிகள் ஓடுபாதையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ வைரலானதை அடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.1.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு, சண்டிகரைச் சேர்ந்த வயதான தம்பதியரின் டிக்கெட்டை மாற்றிய ’ஏர் இந்தியா’ நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை.. ரூ.25 கோடி அபராதம்.. செபி அதிரடி