இந்தியா

184 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ! சுதாரித்த பைலட்டால் விபத்து தவிர்ப்பு!

184 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ! சுதாரித்த பைலட்டால் விபத்து தவிர்ப்பு!

webteam

184 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில், சுமார் 1000 அடி உயரத்தில் தீ பற்றியதால் மீண்டும் விமான நிலையத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.

அபுதாபியில் இருந்து காலிகட் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

அபுதாபி விமான நிலையத்தில் இருந்து காலிகட் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சற்று நேரத்திலேயே விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தீ பிடித்துள்ளது. அதை கவனித்த விமானி, துரிதமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் அபுதாபி விமானநிலையத்திற்கு திருப்பி தரையிறக்கினார்.

கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த நிலையில், என்ஜின் ஒன்றில் தீ பிடித்ததாக தெரிகிறது என்று விமான இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இயக்குனரகத்தில் தகவலில், ”விமானத்தில் மொத்தம் 184 பயணிகள் இருந்ததாகவும், விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில், ஒரு இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதை கவனித்த விமானி அபுதாபி விமானநிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தாகவும்” விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, கடந்த ஒரு வாரத்திற்குள் அவசர அவசரமாக தரையிறக்கப்படுவது என்பது, இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த ஜனவரி 29 அன்று, ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, அதன் ஹைட்ராலிக் செயல் பகுதி செயலிழந்ததைத் தொடர்ந்து, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.