13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என விமானப் படை அறிவித்துள்ளது
அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, ஜூன்3ம் தேதி மதியம் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. விமானத்தில் 8 விமானிகளும், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.
இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.விமானம் மாயமாகி 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானத்தை தேடும் பணிகள் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என விமானப் படை அறிவித்துள்ளது. விமானம் குறித்த தகவல் தெரிந்தால் 0378-3222164, 9436499477, 9402077267 மற்றும் 9402132477 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.