இந்தியா

குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி

குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி

rajakannan

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா குறித்து காரசாரமான விவாதம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதேபோல், இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசினார். அப்போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை அவர் அவையிலேயே கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகுபாடு காரணமாக தென்னாப்பிரிக்காவில் தனது குடியுரிமையை மகாத்மா காந்தி கிழித்ததை சுட்டிக்காட்டி ஓவைசி இதனை செய்தார்.

ஓவைசி பேசுகையில், “இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. சீனாவால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர்கள் ஏன் இதில் சேர்க்கப்படவில்லை. சீனாவை கண்டு பயப்படுகிறீர்களா?.இந்தச் சட்டம் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக ஆக்கும், நாட்டை மற்றொரு பிரிவினைக்கு உள்ளாக்கும் நோக்கம் கொண்டது. இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது” என்றார்.