இந்தியா

என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோட்ஸேவின் வாரிசுகள் - ஒவைசி காட்டம்

என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோட்ஸேவின் வாரிசுகள் - ஒவைசி காட்டம்

Veeramani

உத்தரப் பிரதேசத்தில் எனது வாகனத்தைத் தாக்கியவர்கள் காந்தியைக் கொன்றதைப் போன்ற மனநிலை கொண்டவர்கள், கோட்ஸேவின் வாரிசுகள் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஓவைசி " என் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோட்சேவின் வழித்தோன்றல்கள், காந்தியைக் கொன்றதை போன்ற மனநிலை கொண்டவர்கள், அம்பேத்கரின் அரசியலமைப்பை அவமதிக்க விரும்புபவர்கள். அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நம்பவில்லை, வாக்குச்சீட்டை நம்பவில்லை, ஆனால் தோட்டாக்களை நம்புகிறார்கள் " என்று கூறினார்.

மேலும், " உத்தரப்பிரதேசத்தில் மாஃபியா ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் சிறைக்கு சென்றுவிட்டதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர் கூறுவது உண்மையானால் , என் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்' என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் ஒவைசியின் கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான சம்பவத்தின் வீடியோ காட்சிகளில், ஒவைசியின் வாகனத்தை இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுடுவது பதிவாகியிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் சச்சின் சர்மா என்ற நபர், "செங்கோட்டை, குதுப் மினார் போன்ற இடங்கள் இந்தியாவுக்குத் தன் முன்னோர்களால் வழங்கப்பட்டவை" என்று அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசி கூறியதால் அவர் மீது தனக்கு வெறுப்பு ஏற்பட்டதாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

இந்த வார தொடக்கத்தில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசின் இசட் வகை பாதுகாப்பினை ஏற்குமாறு ஒவைசியிடம் வலியுறுத்தினார். இருப்பினும், தான் ஒரு சுதந்திரப் பறவை என்றும், ஆயுதம் ஏந்திய காவலர்களால் தான் சூழப்பட விரும்பவில்லை என்றும் கூறி அதனை ஒவைசி நிராகரித்தார்.