இந்தியா

மனைவியை ஆசிட் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய காவலர்

மனைவியை ஆசிட் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய காவலர்

Sinekadhara

குஜராத்தில் ஆசிட் குடிக்கச்சொல்லி கொடுமைப்படுத்திய கணவர்மீது மனைவி புகார் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் அஷோக் சவுஹான். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணமானதிலிருந்தே அஷோக்கின் குடும்பத்தார் ஜெயஸ்ரீயை சிறிய விஷயங்களுக்குக்கூட குற்றப்படுத்தி துன்புறுத்தி வந்திருக்கின்றனர்.

திருமணத்தின்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர் அஷோக்கிற்கு வரதட்சணையாக ஒரு பைக் கொடுத்திருக்கின்றனர். 8 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை சில குரங்குகள் சேதப்படுத்திவிட்டன. இதனால் ஆத்திரமடைந்த அஷோக் ஜெயஸ்ரீயின் பெற்றோர் தரமற்ற பைக்கை கொடுத்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி அடித்து துன்புறுத்தி இருக்கிறார். ஆனால் தனக்கு நேர்ந்துவரும் கொடுமையைப் பற்றி ஜெயஸ்ரீ நீண்டநாட்களாக வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஜெயஸ்ரீயை காவல்துறையின் உதவியை நாடவைத்திருக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான தகவலின்படி, ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு பாரம்பரிய உடையை அணிவதில் அஷோக்கின் சகோதரிக்கும், ஜெயஸ்ரீக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தனது சகோதரியுடன் சண்டையிட்டதற்காக ஆத்திரமடைந்த அஷோக் தனது மனைவியை இரக்கமின்றி அடித்து வயிற்றிலேயே உதைத்திருக்கிறார். மேலும் ஆசிட்டை குடிக்கச்சொல்லி வற்புறுத்தியதுடன், வலுக்கட்டாயமாக குடிக்க வைத்திருக்கிறார். வயிற்று எரிச்சல் தாங்கமுடியாத ஜெயஸ்ரீ தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியிருக்கிறார். ஆனால், அஷோக் வயிற்றிலேயே எட்டி உதைத்து அடித்திருக்கிறார்.

ஜெயஸ்ரீயின் பரிதாப நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் அவர் தனது கணவர் குறித்து ஷாஹிபாக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.