அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு விசாரணையின் போது, திருமதி காந்தி என்ற பெயரை இடைத்தரகர் மிட்செல் தெரிவித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு 8 AW101 ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 1999-இல் ஒப்புதல் அளித்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையை 8இல் இருந்து 12 ஆக உயர்த்தியது. விஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்க ரூ3,546 கோடி மதிப்பீட்டில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 2010-இல் ஒப்பந்தம் போடப்பட்டது. 2012-இல் 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்தது.
இதனிடையே ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ஒப்பந்த தொகையில் 10 சதவீதம் லஞ்சம் தரப்பட்டதாக புகார்கள் எழுந்தது. துபாய், இத்தாலி, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் வழியாக இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மிட்செல் மற்றும் கியுடோ ஹாஸ்ச்கே ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பாட்ட பின்மெக்கானிகா முன்னாள் தலைவர் ஜியுஸ்ப்பே ஒர்ஷி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ புருனோ ஸ்பக்னோலினி இருவரையும் இத்தாலி நீதிமன்றம் கடந்த ஜனவரி 8-ம் விடுவித்தது.
இந்நிலையில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிட்செல் இந்த மாதம் 5-ம் தேதி துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டார். டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் தொடர்பான விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 7 நாள் விசாரணைக்கு பின்னர் மிட்செல் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணையின் போது மிட்செல், ‘திருமதி காந்தி’ மற்றும் ‘இத்தாலி பெண்ணின் மகன்’ பெயர்களை கூறியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இடைத்தரகர் மிட்செல் உள்ளிட்டோருடன் தொடரில் உள்ள அந்த நபர் யார் என்ற ரகசியத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, விசாரணைக்கான கால அவகாசத்தை மேற்கொண்டு 7 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில் கேட்கப்பட்டதும், மிட்செல் சொன்னதும் என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. விசாரணையின் போது உங்கள் தந்தைக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்று மிட்செலிடம் அமலாக்கத் துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு திருமதி காந்தி என்று அவர் பதில் அளித்துள்ளார். அதாவது இந்திரா காந்தியைத் தான் திருமதி காந்தி என்று கூறியதாக தெரிகிறது.