மாரடைப்பு முகநூல்
இந்தியா

ஆக்ராவில் திருமணத்தில் நடந்த சோக சம்பவம்: மாரடைப்பால் மரணித்த மணமகன்!

அரங்கங்களில் ஒலிக்கப்படும் அளவுக்கதிகமான ஒலியினாலும், அதீத மகிழ்ச்சியினாலும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

Jayashree A

திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு இனிய அனுபவம். அந்த ஒரு நாள் நிகழ்வுக்காக வாழ்க்கையில் சேமித்து வைத்த பணம் முழுவதையும் செலவு செய்து, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக திருமண கொண்டாட்டத்தை நாம் காலம் காலமாக நடத்தி வருகிறோம்.

திருமணம்

சமீப காலங்களில் திருமணத்தை வெகு விமர்ச்சையாக கொண்டாட விரும்பி திருமணத்திற்கு முதல்நாள் ஆடல் பாடல், சங்கீத், என்று பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அரங்கங்களில் ஒலிக்கப்படும் அளவுக்கதிகமான ஒலியினாலும், அதீத மகிழ்ச்சியினாலும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு சம்பவம் ஒன்று ஆக்ராவில் நடந்துள்ளது.

ஆக்ராவை அடுத்த ஹத்ராஸ் நகரில் இருக்கும் போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணிணி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் இரு சகோதரனுடன் வசித்து வருகிறார். இவரது தாய்க்கு புற்றுநோய் இருப்பதாகவும், இவரின் ஒரு வருமானத்தில், தாயைக் கவனித்துக் கொண்டும் தம்பிகளைப் படிக்கவைத்துக் கொண்டும் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

மாரடைப்பு

இந்நிலையில் இவருக்கு ஆக்ராவைச் சேர்ந்த மோகினி என்ற பெண்ணுடன் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல்நாளில் நடைப்பெற்ற ‘பாத்’ என்ற திருமண நிகழ்ச்சியில், நண்பர்கள் உறவினர்களுடன் நடமாடிக் கொண்டிருந்துள்ளார் சிவம். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனை கொண்டு சென்றநிலையில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதீத ஒலியால் இம்மரணம் நிகழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.