அக்னிபாத் போராட்டம் எதிரொலியாக பீகார் மாநிலத்தில் ஜூன் 19ஆம் தேதி வரை இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக் கூடிய வகையில், மத்திய அரசு இளைஞர்களுக்காக கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில்தான் முதன்முறையாக போராட்டம் தொடங்கியது. இதன் பிறகுதான் பிற மாநிலங்களுக்கு போராட்டம் பரவியது. ஆங்காங்கே ரயில்களுக்கு தீ வைப்பு போன்ற அசாம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள கைமர், போஜ்பூர், ஒளரங்காபாத், ரோஹ்தாஸ், பக்ஸர், நவாடா, மேற்கு சம்பரன், சமஸ்திபூர், லக்சிசராய், பெகுசராய், வைஷாலி மற்றும் சரண் ஆகிய 12 மாவட்டங்களில் தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (ஜுன் 19) வரை அமலில் இருக்கும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது.
மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, சில சமூக விரோதிகள் வதந்திகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பி, அவர்களை தூண்டிவிடும் வகையிலும், உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் செயல்படுவதாக பீகார் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ஹரியானா மாநில அரசும் இணையதள சேவையை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.