இந்தியா

மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா

மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா

rajakannan

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், முதன்மை செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல், காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை நியமிக்க, பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. மற்ற மாநிலங்கள் தங்களது உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்த நிலையில், கர்நாடக அரசு எந்தப் பெயரும் பரிந்துரைக்காமல் காலம் தாழ்த்தியது. 

கர்நாடக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தியை அடுத்து, தலா 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பொறுத்தவரை, கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு மேலாண்மை ஆணையத்தை அமைத்த அடுத்த சில நாட்களில் கர்நாடக அரசு தமது உறுப்பினர்களை நியமித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, “காவிரி ஆணைய விவகாரத்தில் 3 நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்; கூட்டத்தில் கர்நாடக மாநில எம்பிக்களும் கலந்து கொள்வார்கள்” என்று கூறினார்.