இந்தியா

"கட்சியில் இணைய ரூ.3 கோடி; தீவிரவாத பின்புலம்!" - தந்தை குற்றச்சாட்டுக்கு ஷெஹ்லா மறுப்பு

"கட்சியில் இணைய ரூ.3 கோடி; தீவிரவாத பின்புலம்!" - தந்தை குற்றச்சாட்டுக்கு ஷெஹ்லா மறுப்பு

sharpana

ஜே.கே.பி.எம் கட்சியில் இணைய ரூ.3 கோடி வாங்கியதோடு, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தன்னுடைய தந்தை தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஜேஎன்யு முன்னாள் தலைவருமான ஷெஹ்லா விளக்கம் அளித்துள்ளார்.

ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் மீது அவரது தந்தையே தீவிரவாத புகார் சுமத்தி இருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலரும், முன்னாள் ஜே.என்.யூ மாணவர் சங்க துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் (ஜே.கே.பி.எம்) முன்னாள் தலைவருமான ஷெஹ்லா ரஷீத் மீது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியவர் வேறு நபர் கிடையாது. அவரின் தந்தை அப்துல் ரஷீத் ஷோரா.

இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங்கிற்கு அப்துல் ரஷீத்  எழுதிய கடிதத்தில், "எனது மகள் ஷெஹ்லா ரஷீத், மூத்த மகள் அஸ்மா ரஷீத் மற்றும் எனது மனைவி ஜுபைதா ஷோரா ஆகியோரிடம் இருந்து மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன். ஷெஹ்லா ரஷீத்தின் பாதுகாப்பு காவலர் சாகிப் அஹ்மது தனது துப்பாக்கியைக் காட்டி எனக்கு மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டல்கள் 2017-ல் ஷெஹ்லா திடீரென காஷ்மீர் அரசியலில் குதித்தபோது தொடங்கியது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத நிதியளிப்பு வழக்கில் ஜாகூர் வட்டாலி மற்றும் (முன்னாள் எம்.எல்.ஏ) பொறியாளர் ரஷீத் கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, நான் ஸ்ரீநகரில் சனத் நகரில் உள்ள அவர்கள் இல்லத்துக்கு அழைக்கப்பட்டேன். இது ஜூன் 2017-ல் நடந்தது. அப்போது ஷெஹ்லா ஜே.என்.யூ-வில் கடைசி செமஸ்டர் படித்து கொண்டிருந்தார். ஷெஹ்லாவை ஜே.கே.பி.எம் கட்சியில் சேரும்படி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்காக அவர்கள் எனக்கு ரூ.3 கோடி கொடுப்பதாக கூறினார்கள்.

அவர்களை நான் நிராகரித்தேன். மேலும் சட்டவிரோத செயல்களால் இந்தப் பணம் வருவதால் அதை வாங்கவில்லை. மேலும், பின்னர் இந்த நபர்களுடன் இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் எனது மகளுக்கு அறிவுறுத்தினேன். ஆனால், எனது ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் ஷெஹ்லா ஜே.கே.பி.எம் கட்சியில் இணைந்துகொண்டார். மேலும், இதற்காக பணம் பெற்றுக்கொண்ட எனது மகள், இந்தப் பரிவர்த்தனை குறித்து யாரிடமும் வெளியிட வேண்டாம் என்று எனக்கு அவரின் பாதுகாவலர் மூலம் மிரட்டல் விடுக்கிறார்.

எனது எதிர்ப்பு இருந்தபோதிலும், எனது மனைவி ஜுபைதா ஷோரா மற்றும் எனது மூத்த மகள் அஸ்மா ஆகியோர் ஷெஹ்லாவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். என் வீட்டில் தேச விரோத நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று எனக்கு ஒரு வலுவான நம்பிக்கை உள்ளது. என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.

இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தன் தந்தை குற்றச்சாட்டு தொடர்பாக பேசியுள்ள ஷெஹ்லா, "அவர் மோசமான மனிதர். எனது தாய் மற்றும் சகோதரிகளை அடித்து துன்புறுத்துவார். இது ஒரு குடும்ப விஷயம் என்றாலும், பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், என் அம்மாவும், என் சகோதரியும் நானும் தந்தையின் வன்முறை தொடர்பான புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

அவர் கூறும் பொய்யான குற்றச்சாட்டு இந்தப் புகாருக்கு எதிர்வினையே. நாங்கள் அவருக்கு எதிராக புகார் கொடுத்ததால் இப்படி ஒரு நாடகத்தை ஆடுகிறார். என் அம்மா தனது வாழ்நாள் முழுவதும் துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் மன சித்ரவதை ஆகியவற்றை பொறுத்துக்கொண்டார். குடும்பத்தின் மரியாதைக்காக அவர் அமைதியாக இருந்தார்.

நானும் என் சகோதரியும் குழந்தைகளாக இருந்தபோது எங்களால் எங்கள் தாயைப் பாதுகாக்க முடியவில்லை. இப்போது அவரது உடல் மற்றும் மன துஷ்பிரயோகத்திற்கு எதிராக நாங்கள் பேசத் தொடங்கியுள்ளோம். அவர் எங்களையும் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். செப்டம்பர் மாதத்தில் அவருக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளேன். அவரைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.