இந்தியா

இந்திய விமான நிறுவனங்களிடையே கடும் போட்டி - புதிதாக 1,200 விமானங்களை வாங்க ஒப்பந்தம்

இந்திய விமான நிறுவனங்களிடையே கடும் போட்டி - புதிதாக 1,200 விமானங்களை வாங்க ஒப்பந்தம்

JustinDurai

ஏர் இந்தியாவுக்குப் போட்டியாக இந்தியாவின் மற்ற விமானச் சேவை நிறுவனங்களும் விமானங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளன.

பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த ஏர் இந்தியாவை கடந்த 2021ஆம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. தற்போது டாடா குழுமம் ஏர் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 840 விமானங்கள் வாங்க ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் அண்மையில் ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். 840 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதனை நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஏர் இந்தியாவுக்குப் போட்டியாக இந்தியாவின் மற்ற விமானச் சேவை நிறுவனங்களும் விமானங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளன. விமான போக்குவரத்துத் துறையின் ஆலோசனை அமைப்பான சிஏபிஏ இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் 1,000 முதல் 1,200 விமானங்களை ஆர்டர் செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் கொரோனாவுக்கு முன்பாக சுமார் 300 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விமானங்களை வாங்குவதை தொடர்பான ஒப்பந்தத்தை தள்ளிவைத்தது. தற்போது அந்த ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. திட்டமிட்டதை விட கூடுதலாக 500 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ஆர்டர் செய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது.  

இப்படி ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், கோ ஃபர்ஸ்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய இந்திய விமான நிறுவனங்களில் குறைந்தது 1,200 விமானங்கள் ஆர்டர் செய்து காத்திருக்கிறது. இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்படக் குறைந்தது 2 வருடம் ஆகலாம். 31 டிசம்பர் 2022 நிலவரப்படி ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இரு நிறுவனங்களும் 12,669 விமான ஆர்டர்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது உலக விமான சேவை நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.