இமாச்சல் மாநிலத்தின் தலைநகரமான சிம்லாவின் பெயரை ஷியாமலா என்று மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரை, பிரயாக்ராஜ் என முதலமைச் சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மாற்றியது. அலகாபாத் பெயர் மாற்றப்பட்ட நிலையில், இமாச்சல் தலைநகரான சிம்லாவின் பெயரையும் ஷியாமலா என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஷிம்லாவின் பெயர் மாற்றக் கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் வீரபத்ர சிங் இந்த கோரிக்கையை நிராகரித்தார். சர்வதேச அளவில் சிம்லா புகழ்பெற்ற நகரம் என்பதால் அதன் பெயரை மாற்ற முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து விஹெச்பி இமாச்சல் மாநில தலைவர் அமன் புரி, “அடிமைத்தனம் என்பது உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ இருக்கலாம். நம்மை ஆட்சி புரிந்த அடக்குமுறையாளர்கள் சூட்டிய பெயரை இன்னும் வைத்திருப்பது மனரீதியான அடிமைத்தனமே. நகரின் பெயரை மாற்றுவது சிறிய நடவடிக்கை தான், ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். சுதந்திரம் அடைந்த பிறகும் பிரிட்டீஸ் ஆட்சியாளர் அவர்களை நினைவுகளாக பலவற்றை விட்டுச் சென்றுவிட்டார்கள். ஹிமாச்சலில் அவர்கள் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்களே இன்னும் உள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், இமாச்சல் மாநிலத்தின் தலைநகரமான சிம்லாவின் பெயரை மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “பிரிட்டீஸார் வருவதற்கு முன்பாக சிம்லா என்பது ஷியாமலா என்றே அறியப்பட்டது. மீண்டும் அதேபெயரை மாற்றுவது குறித்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும்” என்றார்.