இந்தியா

வைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்

webteam

ஐதராபாத் மியூசியத்தில் திருடப்பட்ட நிஜாம் மன்னரின் தங்க டிபன் பாக்ஸை காவல்துறையினர் மீட்டனர்.

ஐதராபாத் மியூசியத்தில் இருந்து நிஜாம் மன்னரின் விலைமதிப்பற்ற தங்க டிபன் பாக்ஸ் அண்மையில் திருடு போனது. வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த டிபன் பாக்ஸ் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிபன் பாக்ஸுடன் தண்ணீர் அருந்தும் குவளை மற்றும் தங்க ஸ்பூன் உள்ளிட்ட சில பொருட்களும் திருடப்பட்டன. இதையடுத்து அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்தனர். ஆனால் அனைத்துக் கேமராக்களிலும் திருடர்கள் பதிவாகவில்லை. இறுதியில் ஒரே ஒரு கேமராவில் மட்டும் அவர்களின் உருவம் அரைகுறையாக பதிந்துள்ளது.

அதனைக் கொண்டு திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மியூசியத்தின் சிசிடிவி காட்சியில் இருந்தவர்களுடன் ஒத்துப்போகும் வகையில் இருவர் ஐதராபாத் சாலையில் திரிந்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவர்கள்தான் திருடர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் திருடிய தங்க டிபன் பாக்ஸ், தங்க குவளை, ஸ்பூன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க டிபன் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் திருடியவுடன், அவற்றை மும்பையில் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில நாட்களாக அங்கு திரிந்தும், விலையுயர்ந்த அந்த பொருட்களை விற்க முடியவில்லை.

இந்நிலையில் ஐதராபாத்தில் தரகர் ஒருவர் மூலம் விற்பதற்கு வந்துள்ளனர். இதற்கிடையே திருடர்களில் ஒருவன் தினமும் அந்த டிபன் பாக்ஸில் உணவு உண்டுள்ளார். இதனால் அது சற்று தேய்மானம் அடைந்துள்ளது. இந்நிலையில் தான் காவல்துறையினர் அவர்களை பிடித்துள்ளனர். விசாரணையில் அந்த திருடர்களின் பெயர் கவுஸ் பாஷா (23), முகமது முபின் (24) என்பது தெரியவந்துள்ளது.