ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அம்மாநிலத்திற்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 45வது டோக்கன் வழங்கப்பட்டது. அத்துடன் அவரது ஆவணங்களின் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது. இவ்வாறாக சுமார் 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, நேற்று பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் முயன்றார். ஆனால் கூட்டநெரிசலால் தாமதம் ஏற்பட்டதால், அவரால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போனது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.