இந்தியா

அலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை

அலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை

rajakannan

அலிகாரில் சிறுமி கொலைச் சம்பவத்தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரை அடுத்த தப்பால் பகுதியில் 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் கடன் பிரச்னையில் சிறுமியின் பெற்றோர் உடனான சர்ச்சையில் கடன் கொடுத்தவர்கள் இந்தக் கொடூர கொலையை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஷாகித் மற்றும் அஸ்லாம் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை கொலை செய்து தங்களது வீட்டின் அருகே புதைத்து வைத்துள்ளனர். போலீசார் மோப்ப நாய் உதவியுடன் உடலைக் கண்டெடுத்தனர்.

சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அபிஷேக் பச்சன் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளதாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். #JusticeForTwinkleSharma ஹேஷ்டேக்கில் இந்தக் கண்டனங்களை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரத்தில் பல்வேறு போலியான செய்திகள் வெளியாகி வருகின்றன. அதில் முக்கியமானது, சிறுமியின் இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் வெளியாகும் செய்திகள். மேலும், சிறுமியின் மீது ஆசிட் வீசப்பட்டதாகவும் செய்திகள் பரவுகிறது.

இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது உடற்கூராய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் போலியான செய்திகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.