பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் முகநூல்
இந்தியா

குரூப் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான்! கெத்தாக சூப்பர் 8-க்குள் முன்னேறிய ஆஃப்கானிஸ்தான் அணி!

டி20 உலகக்கோப்பை தொடரில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

PT WEB

குரூப் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை தொடரில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், இந்திய அணி 3 வெற்றிகளுடன் ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் நூலிழையில் தோல்வியை தழுவிய அந்த அணி, கனடா அணியை வீழ்த்தியது. அதே வேளையில், அமெரிக்க அணி பாகிஸ்தான், கனடா அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

இந்த சூழலில், நேற்று நடைபெறவிருந்த போட்டியில் அமெரிக்க அணி, அயர்லாந்தை எதிர்கொள்ளவிருந்தது. இந்தப் போட்டியில், அமெரிக்க அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை கனமழை சுக்குநூறாக்கியது. ஃப்ளோரிடாவில் கனமழை கொட்டியதால் ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி ரத்தானது.

இதனால் அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இதன் மூலம், 5 புள்ளிகளைப் பெற்ற அமெரிக்கா அணி, முதன்முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஃப்கானிஸ்தான்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. டி20 உலகக்கோப்பை தொடரில் டிரினிடாட்டில் இன்று நடைபெற்ற சி பிரிவு போட்டியில் பப்புவா நியூ கினி அணியை ஆஃப்கானிஸ்தான் சந்தித்தது.

முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினி அணி 95 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய ஆஃப்கானிஸ்தான் 15.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை தொட்டது. இதன் மூலம் சி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இப்பிரிவில் வெஸ்ட் இண்டீசும் சூப்பர் 8க்கு 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் ஆஃப்கானிஸ்தானை விட பின் தங்கி 2ஆம் இடத்தையே பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே சூப்பர் 8க்கு தகுதிபெற்றுள்ளன