ஷர்மிளா புதிய தலைமுறை
இந்தியா

”என்னிடம் மட்டுமின்றி, பலரிடமும் CISF வீரர்கள் இதுபோல் நடந்துள்ளனர்” - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி!

Prakash J

சென்னைக்குப் பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்துக்கு, ஷர்மிளா ராஜசேகர் என்ற பெண், நேற்று (டிச.13) இரவு 8.30 பாதுகாப்பு சோதனைக்காக நின்றுள்ளார். அப்போது பெண்கள் வரிசையில் இருந்து பாதுகாப்பு படை காவலர் ஒருவர், மற்றொரு ட்ரேவை எடுக்குமாறு இந்தியில் கூறியதாகத் தெரிகிறது. ’தமக்கு இந்தி தெரியாது’ என அந்தப் பெண் சொல்லியும், அந்த அதிகாரிகள் ’இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ எனப் பதிலளித்தது அவருக்கு மனவேதனையைத் தந்தது.

இதையடுத்து அவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்ததுடன், அவர்கள் மீது புகாரும் அளித்தார். இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஷர்மிளா, கோவை விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்குப் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ”நான் குடும்பத்தினருடன் கோவா விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனையில் நின்றபோது, ’வேற பெட்டியை எடுங்கள்’ என்று அதிகாரிகள் கூறினர். அவர்கள் இந்தியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. பின்னர், ’அவர்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ எனக் கேட்டனர். அதற்கு நான், ‘தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது; அதனால் இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், அது தேசிய மொழி’ என்றனர். அதைக் கேட்ட நான், ‘இந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல; அலுவலக மொழி’ எனப் பதிலுரைத்தேன். அதைக் கேட்ட அவர்கள், ‘நீங்கள் கூகுளில் பாருங்கள்’ என்றனர். பின்னர், நான் என்னுடைய மொபைல் போனில் கூகுளில் சர்ச் செய்து, இந்தி அலுவலக மொழி என்பதை எடுத்துக் காட்டினேன்.

இதை, என் கணவரிடம் எடுத்துச் சொன்னேன். அவர், ‘இதை நீ புகாராக ரிஜிஸ்டர் பண்ணு’ எனச் சொல்லிக் கொண்டிருக்கையில், என் பின்னே வந்தே அவர்களும் இதேபோன்று பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்கள், ‘இந்தி தெரியாதா’ எனக் கேவலமாகக் கேட்டனர். இதையடுத்து நான் சிஐஎஸ்எஃப் அதிகாரி அறைக் கதவைத் தட்டி, ‘உங்களிடம் பேச வேண்டும்’ எனத் தெரிவித்து, ’எந்த மொழியாக இருந்தாலும், எந்த கலாசாரத்தில் இருந்து வந்தாலும் அனைவரையும் சுயமரியாதையுடன் நடத்த வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தேன்.

பின்னர், மேலே வந்தபிறகும் அந்தப் புகாரை இமெயிலாக அளித்துள்ளேன். அதையும் அவர்கள் சிஐஎஸ்எஃப் ஹெட்குவாட்டர்ஸுக்கு அனுப்பியுள்ளார்கள். அடுத்தமுறை ரெஸ்பான்ஸ் செய்வதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை, கோவா சிஐஎஸ்எஃப் ஆபிஸிலிருந்து போன் செய்து மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளனர்” என புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.