ஜெயக்குமார் pt web
இந்தியா

“ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது” - விகே பாண்டியனுக்காக களமிறங்கிய ஜெயக்குமார்!

தமிழரை இழிவுபடுத்தும் வகையில் ஒடிசாவில் தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PT WEB

மக்களவை தேர்தலோடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற 7 கட்ட தேர்தல்களில் ஒடிசா சட்ட மன்ற தேர்தலை ஒட்டிய பரப்புரைகள் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது. ஆம், ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி பரப்புரைகளில் இருந்தது. பாஜக தனது பரப்புரையை ’தமிழர் எப்படி ஒடிசாவை ஆளலாம்?’ என வி.கே.பாண்டியனுக்கு எதிராக மேற்கொண்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே. பாண்டியன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமாக ஒரு நபராக இருந்து வருகிறார். வி.கே.பாண்டியனை கடுமையாக பாஜக விமர்சித்து வந்த நிலையில், அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள பரப்புரை வீடியோக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரை இழிவுபடுத்தும் வகையில் ஒடிசாவில் தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#BREAKING | பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக பாஜக பார்க்கிறது: ஜெயக்குமார்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆதரவாளர்கள் சிலரே இந்த விளம்பரத்தை விமர்சித்துள்ளனர். நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “தமிழர்களை கேலி செய்யும் இந்த கேவலமான விளம்பரத்தை தமிழனாக கண்டிக்கிறேன். வி கே பாண்டியனைக் கண்டு யாருக்கு பயம்?” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பலரும் விகே பாண்டியனை விமர்சித்து பாஜக தரப்பு வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.