adr, election commission pt web
இந்தியா

நாடாளுமன்ற தேர்தல்: 538 தொகுதிகளில், பதிவான & எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே 6 லட்சம் வித்தியாசம்!

நாடாளுமன்ற தேர்தலில் 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வித்தியாசம் ஏறத்தாழ 6 லட்சம் வரை இருப்பதாக ADR அமைப்பு தெரிவித்துள்ளது.

Angeshwar G

ஏறத்தாழ 6 லட்சம் வித்தியாசம்

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில், பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஏறத்தாழ 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association of Democratic Reforms) தெரிவித்துள்ளது.

தேர்தலில் 362 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தமாக பதிவான வாக்குகளை விட 5,54,598 வாக்குகள் குறைவாக எண்ணப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 5 லட்சம் வாக்குகள், வாக்கு எண்ணும் அதிகாரிகளால் எண்ணப்படவில்லை என அறிக்கை தெரிவித்துள்ளது. 176 தொகுதிகளில், பதிவான வாக்குகளைவிட, 35,093 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டதாகவும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கையின் இறுதித் தரவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்றும் அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

வித்தியாசம் இல்லாமல் 4 தொகுதிகள் மட்டுமே..

உதாரணத்திற்கு, திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் வாக்களிக்கும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 14,30,738. ஆனால், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 14,13,947. மொத்தமாக 16,791 வாக்குகள் எண்ணப்படவில்லை என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறைவாக எண்ணப்பட்ட தொகுதிகள்

Lok_Sabha_Elections_2024_Votes_polled_and_counted_in_all_the_parliamentary_constituencies_Votes_counted_less_than_votes_polled.pdf
Preview
சசிகாந்த்

பதிவான வாக்குகளை விட அதிகமாக எண்ணப்பட்ட விவகாரத்தில், எண்ணிக்கையின் அடிப்படையிலான முதலிடத்தில், அஸ்ஸாம் மாநிலத்தின் காரிம்கஞ்ச் தொகுதி உள்ளது. இதில் பாஜக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 18,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு மொத்தமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 11,36,538 என்று இருக்க, எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையோ 11,40,349 ஆக உள்ளது. அதாவது, 3811 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குளறுபடிகளையே ஏடிஆர் அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதிகமாக எண்ணப்பட்ட தொகுதிகள்

Lok_Sabha_Elections_2024_Votes_polled_and_counted_in_all_the_parliamentary_constituencies_Votes_counted_more_than_votes_polled.pdf
Preview

அம்ரேலி, அட்டிங்கல், லட்சத்தீவு மற்றும் டாமன் டையூ போன்ற நான்கு தொகுதிகளில் மட்டுமே பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. எஞ்சியுள்ள 538 நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவான மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளில், வாக்கு வித்தியாசம் என்பது 5,89,691 வாக்குகள் வரை இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

எண்ணிக்கை சரியாக உள்ள தொகுதிகள்

Lok_Sabha_Elections_2024_Votes_polled_and_counted_in_all_the_parliamentary_constituencies_No_Difference.pdf
Preview

தேர்தல் முடிவுகளில் பொதுமக்கள் சந்தேகம்

ஏடிஆர் நிறுவனர் ஜக்தீப் சோக்கர், "தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள் பதிவான வாக்குககளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுகிறது. இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் மிதமிஞ்சிய தாமதம், பிரிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடி புள்ளிவிவரங்கள் முழுமையான எண்ணிக்கையில் இல்லாதது போன்றவை தேர்தல் முடிவுகளின் மீது பொதுமக்களின் சந்தேகத்தை எழுப்பியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

2019 தேர்தலின் போதும் இத்தகைய நிகழ்வுகள் நடந்த நிலையில், அதுதொடர்பாக ADR அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்து. அதில் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

"2019 ஆம் ஆண்டு இருந்த அத்துமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், முறைக்கேடுகளை தீர்ப்பதற்கும், அதற்கு எதிரான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் வாக்காளர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தீர்க்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் அதிகமாக எண்ணப்பட்ட வாக்குகளால் எத்தகைய முடிவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை அந்த அமைப்பு விளக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தவேண்டும்

கடந்த ஜூன் 3 ஆம் தேதி, வாக்காளர் வாக்குப்பதிவு விபரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “வாக்காளர்களின் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என தெரிவித்திருந்தது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான குரேஷி, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும், வாக்காளர்கள் அளித்த வாக்குகளிலும், எண்ணிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

79 தொகுதிகளில் NDAக்கு பலனளித்திருக்கலாம்

இதைத்தாண்டி மகாராஷ்ட்ராவை தளமாகக் கொண்ட Vote For Democracy எனும் அமைப்பு, 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆரம்ப மதிப்பீடுகளில் இருந்து இறுதி புள்ளிவிபரங்கள் வரை, ஒட்டுமொத்தமாக, 4.65 கோடி வாக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 மாநிலங்களில் 79 இடங்களில் பலனளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

LokSabhaElection BJP

மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.