இந்தியா

“டார்கெட் செய்கிறார்கள்; சாட்சியை கலைக்கிறார்”-ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது காரசார வாதம்

“டார்கெட் செய்கிறார்கள்; சாட்சியை கலைக்கிறார்”-ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது காரசார வாதம்

Veeramani

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்தது மும்பை உயர்நீதிமன்றம்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட எட்டு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஷாருக்கானின் மகன் இதில் சிக்கி உள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள், இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், அவர் மேல் முறையீடு செய்தார். ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆர்யன்கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று, மும்பை உயர் நீதிமன்றத்தில், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ஜாமீன் மனு, விசாரணைக்கு வந்தது. இந்த முறை, ஆர்யன் கான் தரப்புக்காக, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துக்கு, ஆர்யன் கான் விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து எந்த போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. அவர், சொகுசுக் கப்பலுக்குள் நுழைவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த வழக்கில் அவர் தவறாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை வேண்டுமென்றே டார்கெட் செய்துள்ளனர். வாட்ஸ் அப் சேட்டிங்கிற்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை."இவ்வாறு முகுல் ரோத்தகி வாதாடினார்.

ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்துவர் மட்டுமல்ல அவர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவும் ஆர்யன் கான் முயற்சித்துள்ளார். இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிரப்புத் தெரிவித்தனர். இதை அடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.