கெளதம் அதானி file image
இந்தியா

மீண்டும் கிடுகிடுவென உயரும் அதானி குழும சொத்துக்கள்! விசாரணைக் குழுவின் அறிக்கை காரணமா?

Prakash J

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை அளித்தது. விசாரணைக் குழுவின் முதற்கட்ட பார்வையில், அதானி நிறுவனம் பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவித முகாந்திரமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தது. இது தற்காலிகமாக அதானி குழுமத்திற்குச் சாதகமாக அமைந்த நிலையில், அதன் பங்குகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர் உயர்ந்து, 64.2 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது இந்திய மதிப்பில் அதானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து ப்ளூம்பெர்க் பில்லியன்ர்ஸ் இன்டெக்ஸில் 18வது இடத்தைப் பிடித்தார். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அதிகபட்சமாக அதானி குழும நிறுவன பங்குகளில், அதானி எண்டர்பிரைசஸ் 33.83 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 25.67 சதவிகிதமும், என்டிடிவி 24.28 சதவிகிதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 23.51 சதவிகிதமும், அதானி வில்மார் 21.02 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பு சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி இருந்தார். ஆனால் ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டுகளால் 40 பில்லியன் டாலர் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு ஆசியாவின் டாப்10 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.