இந்தியா

மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட அதானி குழும பங்குகள்.. இன்றைய உயர்வுக்கு இதுதான் காரணம்!

மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட அதானி குழும பங்குகள்.. இன்றைய உயர்வுக்கு இதுதான் காரணம்!

webteam

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இன்றும் அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளன.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, தொடர் சரிவைச் சந்தித்து வந்த அதானி குழும பங்குகள், கடந்த இரண்டு நாட்களாகச் சற்று ஏற்றத்தைச் சந்தித்தன. இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள். இந்த சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கெளதம் அதானி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. இது காலக்கெடுவுக்குள் இறுதி முடிவைக் கொண்டுவரும். உண்மை வெல்லும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதானி குழும பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்றும் அதானி குழும ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி வில்மர், அதானி பவர் உள்ளிட்ட பங்குகள் 5% அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. அதானி பவர் பிஎஸ்இயில் ரூ.161.40 ஆகவும், அதானி கிரீன் ரூ.535.25 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் ரூ.708.35 ஆகவும், அதானி வில்மர் ரூ.398.40 ஆகவும் இருந்தது. அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ 2.02 சதவீதம் உயர்ந்து ரூ.614.30க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, இதற்கிடையில், அதானி மொத்த எரிவாயு 2.87 சதவீதம் உயர்ந்து ரூ.733.65 ஆக இருந்தது. அம்புஜா 3.88 சதவீதம் உயர்ந்து, ரூ. 367.10 ஏசிசி 0.80 சதவீதம் உயர்ந்து ரூ.1,783.55க்கு வர்த்தகமானது.

இதற்கிடையில், என்டிடிவி 4.41 சதவீதம் உயர்ந்து, பிஎஸ்இயில் ரூ.208.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும், அதானி எண்டர்பிரைசஸின் சுமார் 3.5 சதவீத பங்குகள், கிட்டத்தட்ட 3.9 கோடி பங்குகள் இன்று கை மாறின. இந்த ஒப்பந்தம் ரூ.5,520 கோடி மதிப்பிலானது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, அதானி எண்டர்பிரைசஸ் 2.78 சதவீதம் உயர்ந்து, பிஎஸ்இயில் ரூ.1,608க்கு வர்த்தகமானது. முன்னதாக அதானி எண்டர்பிரைசஸ், தொடக்கத்தில் 10% சரிவினைக் கண்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஏற்றம் காணத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில் அதானி குழும பங்குகள் 31% ஏற்றம் கண்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்