தேசிய பங்குச் சந்தையில் நேற்றும், இன்றும் அதானி குழும பங்குகள் உயர்ந்துள்ளன. இன்று, அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு 39,000 கோடி ரூபாய் உயர்ந்து, 7.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி கீழிறக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று தொடங்கிய தேசிய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை ஏற்றத்தைச் சந்தித்தன. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் - செஸ், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றத்தினை கண்டது.
இதன் காரணமாக அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு 39,000 கோடி ரூபாய் அதிகரித்து, 7.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், கடந்த அமர்வில் சந்தை மதிப்பானது 30,000 கோடி ரூபாய் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டது. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 15.78 சதவீதம் உயர்ந்து, என்எஸ்இயில் ₹1,579.00 ஆக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் அதானி பங்குகளின் விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
நேற்று 14 சதவீதமாக நிறைவடைந்த நிலையில், இன்று மேலும் 15 சதவீதம் கூடி நாளின் உச்சத்தை எட்டியது. அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.64 சதவீதம் உயர்ந்து ₹608.25 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் 2.27 சதவீதம் உயர்ந்து ₹349.80 ஆகவும், ஏசிசி 1.33 சதவீதம் உயர்ந்து ₹1,755.25 ஆகவும் இருந்தது. இதற்கிடையில் இதன் சந்தை மூலதனம் 1,71,051 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்று, 1,55,502 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15,549.62 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதானி குழுமம் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதோடு நிறுவனம் 800 மில்லியன் டாலர் கடன் வசதிக்காகவும் உறுதியான உறுதிபாட்டையும் பெற்றுள்ளதாகவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 750 மில்லியன் டாலர் எனும் அளவிலான மறுநிதியளிப்பு அளிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. தவிர, அதானி குழுமம் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தியதும், எஃப்.பி.ஓ. பங்குகளைத் திரும்பப் பெற்றதுமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் கடந்த காலங்களில் அதானி குழும பங்குகள் சரிவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்